மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தினமும் நாலுவேளை பூஜை உண்டு. இக்கோவிலின் காவல் தெய்வமாகப் ‘பாவாடைராயர்’ இருக்கிறார். மேல்மலையனூர் பிள்ளையாருக்கும் ஒரு கால் ஊனமாக இருந்ததாம். பித்துப் பிடித்த நிலையில் இருக்கும் தனது தகப்பனாரின் காவல் தெய்வமாக இருந்து அன்னையை வேண்டிய பின்பு நல்ல கால்களைப் பெற்றதாகக் கூறுவதுண்டு. எனவே தான் இவ்வாலயத்தின் வலது புறத்தில் நின்ற திருக்கோலத்தில் பிள்ளையார் காட்சி தருகிறாராம். பிள்ளையாரின் எதிர்ப்பக்கத்தில் பெரிதாக ஒரு மேடை உண்டு. அதிலே சிவன் இருந்ததாகக் கூறுவர். இவ்வாலயத்தில் மீனவர்கள்தான் பூஜித்து வருகிறார்கள். அந்த யுகார்ந்த காலத்தில் சரசுவதி சாபத்தின் காரணமாக புற்றுருவாகிய அங்காளம்மன் ஒரு மீனவரின் கனவில் காட்சி அளித்து நீதான் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னதாகவும் அவனும் மீன் கொண்டு வந்து அன்னைக்குப் படையல் வைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடக்கமாகவே இன்றும் இக்கோவிலில் மீனவர் குடும்பத்தில் உள்ளவர்களைத்தான் மாறிமாறித் தேர்வு செய்து தர்மகர்த்தாக்களாக நியமனம் செய்யப்படுவதைக் காணலாம். தற்காலத்தில் சைவ சமய வழிபாடு நடந்து வருவது தெரிகிறது.
மனதிற்கு நிம்மதியை நாடிவருபவர்கள் நிறையப் பேர்களாவர். அந்த இடமே இடுகாடு அங்கே வந்து உறக்கம் கொண்டு காலையில் விழித்துக் மனப்போராட்டங்கள் தீர்ந்து செல்வதாகக் கூறுவர். அமாவாசை இரவு வேளையில் இவ்வாலயத்திற்குப் போனால் அப்போது சுடுகாட்டில் பல பேர் படுத்துஆழ்ந்து உறங்குவதைக் காணலாம். இக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணிவரை திறந்த படியிருக்கும். பிறகு மூடப்படும். அப்புறம் இரவு 8 மணிவரை திறந்தபடியிருக்கும். பிறகு மூடப்படும். திருவிழா நேரங்களில் காலை 3 மணிவரை சேவை உண்டு. இன்னொரு விசேஷம் என்ன வென்றால் இங்கு அமாவாசை நாளில், தேவர்களும், சித்தர்களும் வந்து வணங்கிச் செல்வதாகக் கூறுவர். அப்போது தேவி ஊஞ்சலில் அமர்ந்திருப்பாள் கொலு மண்டத்தில்.