திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லம்பாளையம் கிராமத்தில் 187 ஆண்டுகள் பழமையான கல்தூண் மற்றும் சித்தர் ஜீவசமாதி உள்ளது. இதனை போயர் சமுதாய மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பல்லடம் வரலாற்று மைய ஆர்வலர் மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:- பல்லடம் சோழர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள், கற்தூண்கள், கோவில்கள் இங்கு உள்ளன. நூற்றாண்டுகளுக்கு முன், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசும் போயர் சமுதாய மக்கள் சிலர் கல்லம்பாளையத்தில் குடியேறினர்.
அவர்களது வம்சா வழியில் வந்த காட்டுகாளி நாயக்கர் என்பவர் சித்தர் போல் வாழ்ந்து இங்கேயே ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. போயர் சமுதாய மக்கள் மற்றும் காட்டுக்காளி நாயக்கரின் குடும்பத்தினரும் தொடர்ந்து இங்கு வழிபாடு செய்து வருகின்றனர். ஏறத்தாழ 6 அடி உயரம் கொண்ட கல்தூண் உள்ளது. இதற்கு கீழ் மேலும் 10 அடியில் மற்றொரு கல் தூண் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இது 1835ம் ஆண்டுக்கு உரியது என்றும், காட்டுக்காளி நாயக்கர் குறித்த தகவலும் இதில் இடம்பெற்றுள்ளது. இவரது ஜீவசமாதியில் லிங்க வடிவில் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.