No results found

    சித்தர் தந்த அபூர்வ பரிசு

    சித்தர்கள் உங்களுக்கென்று பிரத்யேகமான பயிற்சிகள் அல்லது பரிசுகள் கொடுத்திருக்கிறார்களா என்று பலர் என்னிடம் நேரிலும் தொலைபேசியிலும் கேட்கிறார்கள் பல சித்தர்களை சந்தித்த அனுபவம் எனக்கிருப்பதனால் இத்தகைய விபரங்களை அறிந்துக்கொள்ளும் ஆவல் அவர்களுக்கு. அதனால் நான் பெற்றிருக்கும் ஒரு நற்பேற்றை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்

        பிரத்யேகம் என்ற வார்த்தையை தனிப்பட்ட, சிறப்புமிக்க என்ற பொருளில் எடுத்துக் கொண்டால் எனக்கென்று  தனி பயிற்சிகள் எதையும்  கொடுக்கவில்லை.  ஆனால் ஆண்டாண்டு காலமாக யோக சாதனை செய்பவர்கள் மிக ரகசியமாக பின்பற்றும் பல வழிமுறைகளை எனக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள்.  அத்தகைய வழிமுறைகளை குரு சிஷ்ய பரம்பரை மூலம் பகிர்ந்து கொள்ளலாமே தவிர புத்தகங்களில் எழுதி பகிரங்கப்படுத்த முடியாது.  அதனால் அதைப் பற்றி நான் எழுத விரும்பவில்லை.

         ஆனால் சித்தர்கள் எனக்கு தந்த புனிதமிக்க ஒரு பரிசைப் பற்றி நிச்சயம் மற்றவர்களுடன் நான் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.  ஏன் என்றால் அதில் மிக சிறப்பான பொதுநலம் கலந்திருக்கிறது.  நாராயண என்ற நாமத்தை நாளும் சொன்னால் கடையனும் கடைத்தேறலாம்.  கடையனை கடை தேற செய்வதற்காக நாம் கூட கடலில் விழலாம் என்ற ராமானுஜ சித்தாந்தத்தை உயிரிலும் மேலாக நான் நேசிப்பதனால் அதை நடைமுறைப்படுத்தவும் விரும்புகிறேன்.

        2006-ம் வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன்.  கன்னியாகுமரிக்கு சென்றிருந்தேன்.  ஒரு நாள் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிப்பதற்கு கடற்கரை அருகிலுள்ள காட்சி கோபுரத்தின் கீழ் போட்டிருந்த பளிங்கு இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

      எதிரே கரு நீல கடல்.  அதில் நுங்கும் நுரையுமாக வந்து மோதும் குட்டி அலைகள்.  வானம் எல்லாம் சிவப்பாகி சூரிய தேவன் தான் ஓய்வு எடுக்க போகும் நேரத்தில் தனது வர்ண ஜால கனவுகளால் எண்ணில் அடங்காத ஓவியங்களை வரைந்து தள்ளிக் கொண்டிருந்தான்.  

       கடல் காற்றில் இருந்த ஈரப்பதம் அணிந்திருந்த கண் கண்ணாடியை பனிமூட்டம் போல மூடியிருந்தது.  பார்வை தெளிவிற்காக கண்ணாடியை எடுத்தால் காற்று கண்ணை கரிக்க செய்தது.  இத்தகைய அவஸ்தையிலும் ஒரு சுகம் இருக்கிறது.  வாழ்வது என்பது கூட ஒரு வித அவஸ்தை தான்.  வாழ்க்கை என்ற சுகத்திற்காக அதை தாங்கி கொள்கிறோம்.  அதே போலத்தான் இதுவும்.

        அப்போது என்னருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார்.  தும்பை பூ மாதிரி அவர் தலை முடியும், ஆடைகளும் வெண்மையாக இருந்தன.  சுருக்கம் விழுந்த முகத்தில் புதைந்து கிடந்த கண்களில் ஒரு ஏகாந்த அமைதி குடிக் கொண்டிருந்தது.  நல்ல சிவந்த நிறம் கரகரப்பான குரலில் நீங்கள் தான் ராமானந்தாவா? என்று என்னிடம் கேட்டார்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இவரை முன் பின் நான் பார்த்தது இல்லை.  என் பெயர் இவருக்கு எப்படி தெரியும் என்று ஆச்சர்யத்தில் நான் அவரை ஏறிட்டு பார்க்கவும் உங்களை நான் நேற்று கனவில் பார்த்தேன்.  என்று அடுத்த அதிர்ச்சியை தூக்கி போட்டார்.

        என் வீட்டில் என்னுடைய தாத்தாவின் அப்பா காலத்திலிருந்து நவ பாஷானத்தில் செய்த விநாயகர் விக்கிரகம் பூஜையறையில் இருந்தது.  அதை காலகாலமாக நாங்கள் நியமப்படி பூஜித்து வந்தோம்.  அது நவபாஷானம் என்பது சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது.  என் அப்பாவிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  ஒரு நாள் என் மகள் வயிற்று பேரன் யாரும் அறியாத நேரம் பூஜையறைக்கு சென்று சிலையை கையில் எடுத்து இருக்கிறான்.  அது எப்படியோ கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது.

        வெளியில் பார்ப்பதற்கு கருப்பாக இருந்த பிள்ளையார் சிலை உடைந்த பிறகு அதன் உள்பாகங்கள் கரும் பச்சை நிறத்தில் இருந்தது.  அதில் ஏதோ விஷேசம் இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்ட என் மகன் தன் நண்பனான ஒரு மூலிகை வைத்தியனிடம் காட்டி இருக்கிறான்.

      அந்த வைத்தியனும் அதை பரிசோதித்து விட்டு தனக்கு எதுவும் தெரியாதுயென சொல்லிவிட்டான்.  ஆனால் அவன் அதில் ஒரு சிறு துண்டை உடைத்து வாயில் போட்டு சுவைத்துப் பார்த்து இருக்கிறான்.  பச்சிலை சாறுகளின் சுவை வந்து இருக்கிறது.  அதனால் அவன் அதை தைரியமாக விழுங்கியும் விட்டான்.  உடைந்த மற்ற பாகங்களை என் மகன் வீட்டில் கொண்டுவந்து சலிப்புடன் ஒரு மூலையில் போட்டு விட்டான்.

        ஒருவாரம் ஆகியிருக்கும்.  அந்த சித்த வைத்தியன் பரபரப்புடன் எங்கள் வீட்டிற்கு வந்தான்.  சிலையின் அந்த பாகங்கள் எங்கே என்றும் கேட்டான்.  எதற்காக நீ அதை கேட்கிறாய் என்று நான் கேட்ட போது தான் அதில் சிறு துண்டை சாப்பிட்டதை சொல்லி இந்த ஒரு வாரத்தில் சிறிய வயதிலேயே தனக்கு மார்பிலும் கழுத்திலும் பரவியிருந்த வெள்ளை தழும்பு முற்றிலுமாக சரியாகிவிட்டது என்றும் வியப்புடன் சொன்னான்.  



      நான் இதனால் தான் அது ஏற்பட்டு இருக்குமென நம்பவில்லை.  காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்கும் என நினைத்தேன்.  ஆனால் என் மகன் அப்படி நினைக்கவில்லை.  அவனும் சித்த வைத்தியனும் சேர்ந்து சிலையின் பாகங்களை சென்னைக்கு யாரோ ஒருவரிடம் காட்ட எடுத்து சென்றனர்.  அங்கு போன பிறகு தான் அது நவபாஷானம் என்று தெரிய வந்தது.

        அந்த விஷயம் தெரிந்த பிறகு என் மகன் சும்மாயிருக்கவில்லை.  வீட்டிற்கு யார் யாரோ வந்தார்கள்.  ஏதோதோ பேசினார்கள்.  ஒரு நாள் என் மகன் சிலையின் பாகங்களை விலைபேசி விட்டதாக என்னிடம் சொன்னான்.  எனக்கு அதை விற்பதில் விருப்பமில்லை.

      ஆனாலும் என் பேச்சு எடுபடாது என்பதினால் விருப்பமில்லாத விஷயத்தை மூடி மறைத்து விட்டு என்ன விலைக்கு கொடுக்க போகிறாய் என்று கேட்டேன்.  அவன் தயக்கமே இல்லாமல் சில கோடி ரூபாய் என்றான்.  என்னால் என்னையே நம்ப முடியவில்லை.  உடைந்து போன ஒரு சிலைக்கு அதன் மருந்து குணத்திற்காக இத்தனை ரூபாய் கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக இருப்பது எனக்கு அதிசயமாகப்பட்டது.

         ஆனாலும் என் மகனிடம் உன் விருப்பப்படி கொடு.  நான் குறுக்கே வரவில்லை.  ஆனால் அதில் ஒரு துண்டையாவது நினைவு பொருளாக வைத்துக் கொள்ள என்னை அனுமதி என்று வேண்டிக் கேட்டேன்.  நான் பெற்ற பிள்ளை அல்லவா? என்னிடம் இருக்கு இரக்க சுபாவம் அவனிடம் சிறிதேனும் இருக்குமல்லவா? அதனால் ஒரு துண்டை எனக்கு கொடுத்து விட்டு மற்றவற்றை விற்று விட்டான்.

        நேற்றுவரை சுவாமி சிலையின் துண்டு பகுதியை பத்திரமாக பாதுகாத்து விட்டேன்.  சில நாட்களாகவே எனக்கு இந்த அரிய பொருள் நம்மிடம் இருந்து துருபிடிக்க கூடாது எதாவது நல்ல காரியத்திற்கு பலரும் பயன்படும் வண்ணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே ஆழ்த்தியது.

      நேற்று என் கனவில் காவி தரித்த ஒரு வயதான மனிதர் வந்து நான் உன் முப்பாட்டன்.  உன்னிடம் இருக்கும் நவபாஷான பகுதியை ராமானந்தா என்ற சந்நியாசிக்கு கொடு என்று கூறி உங்கள் முகத்தையும் தெளிவாக மனதில் நிற்கும்படி காட்டி மறைந்தார்.

       இன்று காலையிலிருந்து கடற்கரை ஓரமாக உங்களை தேடி அலுத்துவிட்டேன்.  பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம் என ஒவ்வொரு இடமாக தேடித்தேடி கடைசியில் இங்கு தான் இப்போது பார்க்கிறேன்.  என்று சொன்ன அவர் பட்டு துணியால் போர்த்தப்பட்டிருந்த பொருளை என்னிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு கிளம்பி விட்டார்.  கடைசி வரை அவர் என்  முகவரியையும் கேட்டகவில்லை, அவர் முகவரியையும்  சொல்லவில்லை.  எனக்கும் அப்போது அது தோன்றவில்லை.

        இன்று அந்த நவபாஷான பகுதி என்னிடம் பத்திரமாக இருக்கிறது.  மிக கொடிய நோயில் அவதிப்படும் சிலருக்கு தெய்வீக சக்திகளின் அனுமதி பெற்று கொடுத்து வருகிறேன்.  அப்படி பெற்றவர்கள் அனைவருமே பரிபூரண குணமடைந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்விற்கு விலையேதுமில்லை.

        பாஷானம் என்றாலே விஷம்.  அந்த விஷத்தை சாப்பிட்டால் உடம்புக்கு கேடு தானே வரும் நலம் எப்படி கிடைக்குமென சிலர் என்ன கூடும்.  சித்தர்கள் முறைப்படி ஒன்பது விதமான பாஷானங்கள் குறிப்பிட்ட அளவுகளில் சேரும் போது அது அபுர்வ மருந்தாகி விடுகிறது.

       உயிர்கொல்லி நோயில் இருந்து மனிதர்களை விடுவிக்கிறது.  பழனியில் உள்ள முருகன் விக்கிரகமும் போகரால் இந்த முறைப்படி செய்யப்பட்டது தான்.  நவபாஷானத்தை போகர் சித்தாந்தப்படி செய்வதற்கு இன்று ஆட்கள் யாரும் இல்லை.  மேலும் அதை முறைப்படி செய்ய வேண்டுமென்றால் அதற்கான செலவுகளை செய்ய கூடிய பலம் சாதாரண மனிதர்களுக்கு இல்லை.  இத்தகைய அரிய பொருள் ஒன்று மிகச்சாதாரண மனிதனான எனக்கு கிடைத்தது முற்பிறவி புண்ணியமும், இப்பிறவியின் சித்தர்கள் அருளும் என்றால் அது மிகை இல்லை.

    Previous Next

    نموذج الاتصال